கொரோனாவின் கோர கரங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளை கொலை செய்த நபருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உயிர்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொண்ணூறாயிரத்தை நெருங்கி உள்ளது. சீனாவில் பரவ துவங்கி சுமார் 67-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கரங்களை படர விட்டுள்ள கொரோனவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள், குடியிருப்பு சோதனைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளை சீல் வைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 6ம் தேதி மா ஜியாங்குவோ என்ற நபர் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தின் ஹோங்கேவில் உள்ள லுயோ மெங் கிராமத்தில் ஒரு சோதனைச் சாவடி வழியாக மினிவேனை ஓட்டி சென்றார்.
அப்போது கொரோனா தடுப்பு சோதனை சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் மா ஜியாங்குவோவை தடுத்து நிறுத்தியுள்ளனர்.ஆனால் மா ஜியாங்குவோவும் அவருடன் வந்த மற்றொருவரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் அதிகாரி ஒருவர்.
இதனால் ஆத்திரமடைந்த மா ஜியாங்குவோ, தான் வைத்திருந்த கத்தியால் அதிகாரி ஒருவரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முயன்ற மற்றொரு அதிகாரிக்கும் சரமாரியாக கத்தி குத்து விழுந்தது. படுகாயமடைந்த இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்நிலையில் தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், தானாக முன்வந்து சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டாலும் கொலைகள் மிகவும் கொடூரமானவை. எனவே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பு கூறியுள்ளது.