அண்டார்டிகா தவிர்த்த மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. இதன் பாதிப்புகளால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகள் 5 லட்சம் கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளன.
சீனா உட்பட உலகம் முழுவதும் கொரானா வைரசுக்கு இதுவரை 2,924 பேர் உயிரிழந்துள்ளனர். 60 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் 85 ஆயிரத்து 207 பேருக்கு கொரானா தொற்றியுள்ளது.
சீனாவில் நேற்று புதிதாக 327 பேருக்கு கொரானா பாதிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து, அன்றாட அடிப்படையில் பார்க்கும்போது இது மிகக் குறைவு.
சீனாவில் கொரானா வைரஸ் பரவுவது மட்டுப்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு வெளியே அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரானாவால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் புதிதாக 45 பேருக்கும், ஃபிரான்சில் 38 பேருக்கும் ஸ்பெயினில் 23 பேருக்கும் கொரானா தொற்றியுள்ளது.
ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தே கொரானா பெரிய அளவில் பரவுவதைகத் தடுக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் நைஜீரியா, ஆஸ்திரேலியா கண்டத்தில் நியூசிலாந்து, ஐரோப்பா கண்டத்தில் பெலாரஸ் மற்றும் லித்துவேனியா நாடுகளில் முதல் முறையாக கொரானா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மங்கோலியாவில் இதுவரை கொரானா பரவவில்லை என்றாலும், அண்மையில் சீனா சென்று திரும்பிய அந்நாட்டு அதிபர் Battulga Khaltmaa-வுக்கு தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட சிலர், மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுவதால், இந்த வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இன்னும் கடினமானதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வைரஸ் பரவல் வணிக, தொழில்துறையிலும் உற்பத்தியிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளால் அமெரிக்காவிலும், உலக அளவிலும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ஒரே வாரத்தில் ஏற்பட்ட அதிக இழப்பாக, பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.