கொரோனா பீதியில் அலறிய ஊழியர்கள்..! வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் லண்டனில் கொரோனா பயத்தால் அலுவலகம் ஒன்று திடீரென மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ள உயிர்கொல்லியான கொரோனா, உலக அளவில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2700-க்கும் அதிகமானோர் உயிரை காவு வாங்கியுள்ளது கொரோனா. சீனாவிற்கு அடுத்து தென்கொரியாவில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேனரி வார்ஃப் (Canary Wharf) என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது மிக பெரிய எண்ணெய் நிறுவனமான செவ்ரான் (Chevron). இந்த நிறுவனம் அமைந்துள்ள westferry circus முழுவதும் பல்வேறு முக்கிய நிறுவங்கள் அமைந்துள்ளன. சிட்டி, எச்எஸ்பிசி மற்றும் பார்க்லேஸ் உள்ளிட்ட பல வங்கிகள் இங்கு உள்ளன. இந்த வணிக வளாகத்தில் சுமார் 1,20,000 மக்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் Chevron நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய நாடு ஒன்றிற்கு சென்று திரும்பியுள்ளார். சமீபத்தில் பணிக்கு திரும்பிய அவர் அலுவலகத்தில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் குறிப்பிட்ட நபருக்கு கொரோனா பரவியிருக்குமோ என்று அஞ்சி நடுங்கினர்.
இந்த விஷயத்தை Chevron நிறுவன நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஊழியர்களின் புகாரை ஏற்று கொண்ட நிர்வாகம், கொரோனா பீதியால் முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக வீட்டிற்கு புறப்பட உத்தரவிட்டது.
மேலும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது Chevron நிறுவனம். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பீதியில் உள்ள ஊழியர்களின் பயத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ள Chevron நிறுவனம், ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது. எனவே ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ளது அந்நிறுவனம்.
சோதனை முடிவுகள் அறியப்படும் வரை ஊழியர்கள், வர்த்தகர்கள், கீழ்நிலை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளது Chevron. மருத்துவர்களின் வழிகாட்டுதலுக்காக Chevron நிறுவனம் காத்திருக்கும் அதே வேளையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவர் என்று தெரிகிறது.