கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு உலக சுகாதார ஆய்வு மைய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரத்தில் தொடங்கி கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களைத் தவிர 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உலகின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9 ஆயிரத்து 216 பேரின் நிலைமை அபாய கட்டத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலான டைமண்ட் பிரின்சசில் மேலும் இரு இந்தியர்களுக்கு கொரோனா தாக்கியுள்ளதால், வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கப்பலில் மொத்தம் 691 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானில் உள்ள குவாம் நகரில் கொரோனா பரவியத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், 61 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரானை தொடர்ந்து அண்டை நாடுகளான ஈராக், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவிலும், இத்தாலியிலும் கெரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து இவ்விரு நாடுகளுக்கும் உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் ஆய்வுக்காக விரைந்துள்ளனர்.
இதனிடையே வூகான் நகரில் மக்கள் வெளியில் நடமாட விதிக்கப்பட்டிருந்த தடையை சீன அரசு நீக்கியுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் அவசர நிதியாக ஒன்று புள்ளி 25 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.