சீனாவில் கொரோனாவின் கொட்டம் இன்னும் அடங்காத நிலையில், கொத்து கொத்தாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தினசரி நிகழ்வாகிவிட்டது. மக்களை மட்டுமின்றி சீன பொருளாதாரத்தையும் சுருட்டி வீசியுள்ளது கொரோனா.
கடும் வீழ்ச்சி:
கொரோனா அச்சம் நீடிக்கும் நிலையில் சீனாவில் பயணிகள் கார் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வாகன சந்தை கொரோனவின் தாக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பிப்ரவரி முதல் பாதியில் அதாவது இந்த மாதத்தின் முதல் 16 நாட்களில் பயணிகள் கார்களின் சில்லறை விற்பனை 92 சதவீதம் சரிந்துள்ளதாக சீன பயணிகள் கார் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
89 சதவீதம் குறைவு..
இது குறித்து கூறியுள்ள சீன பயணிகள் கார் சங்கம், பயணிகள் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தின் முதல் 16 நாட்களில் 4,909 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த வருடம் 59,930 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தன என குறிப்பிட்டுள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிட்டால் 89% குறைவாகும்.
வர்த்தகத்தில் கடும் பாதிப்பு
உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் என அனைத்தையும் முடக்கி போட்டுள்ளது உயிர்கொல்லியான கொரோனா. ஒவ்வொரு காருக்கும் தேவையான பல்லாயிரக்கணக்கான உதிரி பக்கங்களை உற்பத்தி செய்ய கார் தயாரிப்பாளர்கள் போராடுவதால் உலகளாவிய வாகன விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாலும் வர்த்தகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா தாக்கத்தால் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் வாகனச் சந்தை விற்பனை 10% என்ற அளவில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வாகன சந்தையான சீனாவில் கடந்த ஆண்டு 25 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கார் விற்கப்பட்டன.