சீனாவில் கொரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்திருப்பதையடுத்து அந்நாட்டில் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 2,345ஆக அதிகரித்துள்ளது.
ஹூபே மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் 2 மாதங்களுக்கும் மேலாக சீனா நிலை குலைந்துள்ளது. தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நாள்தோறும் வைரஸுக்கு தொடர்ந்து மக்கள் உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் மேலும் 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது.
397 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதும் நேற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டதால், வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 76 ஆயிரத்து 288ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி, வைரஸ் குணமடைந்து மருத்துவமனைகளில் தொடர்ந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி நேற்று வரை 20 ஆயிரத்து 659 பேர் வீடு திரும்பியிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் ஆய்வு நடத்தி வரும் சர்வதேச சுகாதார அமைப்பின் 12 பேர் குழு, உகானுக்கு இன்று செல்ல இருக்கிறது. அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதுடன் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முடிவெடுக்க உள்ளது.
இதனிடையே, சீனாவிலுள்ள சிறைகளிலும் கொரானா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைகளில் இருக்கும் கைதிகள், அதிகாரிகளை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரானா வைரஸ் பாதிப்பு அறிகுறி இல்லாத உகானைச் சேர்ந்த இளம்பெண் மூலம் அவருடைய உறவினர்கள் 5 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 வயதான அந்த பெண், உகானில் இருந்து 675 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்யாங்குக்கு சென்றுள்ளார். அவருக்கு கொரானா வைரஸுக்கான அறிகுறியாக கூறப்படும் காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை.
இருப்பினும் அவர் மூலம் உறவினர்கள் 5 பேருக்கு தற்போது வைரஸ் பரவியுள்ளது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் எந்த அறிகுறியும் இல்லாமலேயே கொரானா வைரஸ் பரவும் தன்மை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.