கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்கப்படாத போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் எரிபொருள் தொட்டியில் கழிவுப்பொருள்கள் காணப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு நடந்ததாக கூறப்படும் இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த அமெரிக்க விமானப்போக்குவரத்து துறை மற்றும் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணை முடிந்து ஏப்ரல் மாத வாக்கில் மீண்டும் பறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என போயிங் எதிர்பார்க்கிறது.
அதே சமயம் சியாட்டில் (Seattle) நகருக்கு அருகே உள்ள உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் இல்லை என்று விசாரணைக் குழுவினர் கூறியுள்ளனர்.
ஆனால் சவுத் கரோலினாவில் (South Carolina) உருவாக்கப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliner) உள்ளிட்ட விமானங்களில் கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அலட்சியமாக போடப்பட்டது என்று வெளியான தகவல் போயிங் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.