பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், பூமியைக் காப்பற்றவும் 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
பெஸோஸ் எர்த் ஃபண்ட் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள அவர், இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாற்றம் என்பது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்துள்ள அவர், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு 10 பில்லியன் டாலர் செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ள பெஸோஸ், விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி உதவும் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதை நாம் ஒன்றாக பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.