கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கி வரும் நிலையில், 75 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றக் கூட்டத்தை ரத்து செய்ய சீன அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கொலைகார கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சியில் கையைப் பிசைந்தபடி உள்ளன. கடைசியாக கிடைத்த தகவலின்படி ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 73 ஆயிரத்து 332 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 795 பேர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சீனாவுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் அதற்கான மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் அதற்கான ஆயத்தப் பணியில் மும்முரமாக உள்ளன. கொரோனோவின் பிறப்பிடமான வூகானில் குடும்பத்தில் ஒருவருக்கு என்ற ரீதியில் பெரும்பாலான மக்கள் அந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சீனாவிற்கு இன்பச் சுற்றுலா சென்றவர்களின் பயணம் துன்பகரமாக மாறியுள்ளது.
சீனாவுக்குச் சென்றுவந்த ஒரே காரணத்தினால் ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள "தி டைமண்ட் பிரின்சஸ்"(The Diamond Princess) சொகுசு கப்பலில் உள்ள 3700 பேரில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 456ஆக உயர்ந்துள்ளது. ஞாயிறன்று ஒரே நாளில், மேலும் 99 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் உள்ள சுமார் 100 இந்தியர்களில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. இதனிடையே கொரோனா பாதிப்பின்றி கப்பலில் சிக்கித் தவித்த 300க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் நோய்த்தொற்றுள்ள 40 பேர் ஜப்பானிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனாவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரோபோக்களை பயன்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குவதற்கு ரோபோக்களைப் பயன்படுத்தியுள்ள சீனா, தற்போது கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வகைகளையும் வழங்குவற்கும் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறது.
மருத்துவமனைக்குள் உலாவும் இந்த ரோபோவில் நான்கைந்து அடுக்குகள் உள்ளன. இதில் உணவு வைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அறையாகச் சென்று அவர்களுக்குத் தேவையானதை கொடுத்து வருகிறது இந்த ரோபோ. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பதற்கும் ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் இந்த கூட்டத்தை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டால் அது வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.