சீனாவில் கொரானா வைரஸுக்கு ஒரேநாளில் மேலும் 143 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிதாக 2 ஆயிரத்து 641 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருந்த 143 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 523ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆயிரத்து 123 பேர் ஹூபே மாகாணம் உகான் பகுதியில் மட்டும் உயிரிழந்திருப்பதாக சீன சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி கொரானா வைரஸுக்கு நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 641 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 492ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் புத்தாண்டையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், அந்த விடுமுறையை தற்போது மேலும் 10 நாள்களுக்கு சீன அரசு நீட்டித்துள்ளது.
அதேபோல் சீனாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்றுவிட்டு, தலைநகர் பெய்ஜிங் திரும்பி வருவோர் 14 நாள்களுக்கு தனிமையில் வீட்டிலோ, மருத்துவ வார்டிலோ இருக்க வேண்டுமென்றும், இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் 2ஆவது பொருளாதார சக்தியாக திகழும் சீனாவில் கொரானா வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நடத்தப்பட இருந்த வர்த்தக கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், வர்த்தகம் தொடர்பான மாநாடுகள் திட்டமிட்டபடி நடத்தப்படாமல் உள்ளன.
சீனாவுக்கு வெளியேயும் 24 நாடுகளில் 450 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காக் சுயாட்சி பகுதியிலும் தலா ஒருவர் வீதம் 3 பேர் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg