வழி தெரியாமல் தடுமாறும் பலருக்கும் கூகுள் மேப்ஸ் வரமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் இந்த வழிகாட்டி செயலி, சில சிக்கலான அல்லது தவறான வழியை காட்டி விடுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
தைரியம் கொடுக்கும் கூகுள் மேப்ஸ்:
முன்பெல்லாம் புதிய இடத்திற்கு போக வழி தெரியாமல் தவித்தால் சாலையில் செல்வோரிடமும், ஆட்டோகாரர்களிடமும் கேட்டு வழியை தெரிந்து கொண்டு செல்வோம். ஆனால் தற்போது இடத்தை மட்டும் சொல்லு எப்படி சரியாக வருகிறேன் பார் என்று கூகுள் மேப்ஸ் இருப்பதை நம்பி தைரியமாக சொல்கிறோம். அந்த அளவிற்கு பெரும்பாலும் துல்லியமான வழியை காட்டுகிறது.
ஆனால் இது அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், தற்போது காட்டுவதை போல துல்லியமாக வழி காட்டவில்லை. போக போக பல வழிகளிலும் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்ஸ் இன்று சிறந்த வழிகாட்டியாக உள்ளது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும்...
தொழில்நுட்பங்கள் என்ன தான் வளர்ச்சியடைந்தாலும் கூகுள் மேப்ஸ் என்னும் வரத்தால் , சில நேரங்களில் சொதப்பல் சம்பவங்கள் நிகழ்கிறன. அமெரிக்காவின் 16-வது பெரிய பெருநகரப் பகுதி மினியாப்பொலிஸ் (Minneapolis). இந்த பகுதியை சேர்ந்த ஒருவரை தீயணைப்புத் துறையினர் மிசிசிப்பி (Mississippi) ஆற்றலிருந்து இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.
கூகுள் மேப்ஸ் தான் காரணம்:
மீட்கப்பட்டு உயிர் பிழைத்தவரிடம் எப்படி நீங்கள் பனி படலம் மூடி இருக்கும் போது நடு ஆற்றில் வந்து சிக்கி நீரில் மூழ்கினீர்கள் என்று விசாரித்துள்ளனர். அவரோ தான் இந்த ஆபத்தில் மாட்டி கொள்ள கூகுள் மேப்ஸ் தான் காரணம் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறிய தகவல்களை பார்ப்போம்.
குறுக்கிட்ட ஆறு:
ஆற்றில் இருந்தது மீட்கப்பட்ட நபர், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப்ஸ் செயலியின் உதவியுடன் போக நினைத்து, அதனை செயல்படுத்தியுள்ளார். கூகுள் மேப்ஸ் காட்டிய திசையில் அவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பிரபலமான மிசிசிப்பி (Mississippi) ஆறு குறுக்கிட்டுள்ளது. அருகிலேயே அதனை கடக்க தரைபாலம் ஒன்றும் இருந்துள்ளது.
யோசிக்காத நபர்:
அப்போது கூகுள் மேப்ஸ் தரைப்பாலம் வழியே செல்லாமல் ஆற்றின் குறுக்கே சென்றால் எளிதாக கரையை கடந்து விடலாம் என்பது போல் காட்டியுள்ளது. இதனை அடுத்து அவர் கூகுள் மேப்ஸ் காட்டிய படி, பனிகட்டிகளால் மூடி உறைந்து இருந்த ஆற்றின் மீது குறுக்காக நடந்து கரையை கடக்க துவங்கியுள்ளார்.அந்த நபர் பாதி தூரம் ஆற்றை கடந்திருந்த போது, பனிக்கட்டி திடீரென உடைந்ததால் எதிர்பாராவிதமாக ஆற்று நீரில் மூழ்கியுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.
யார் காரணம்?
மிசிசிப்பியின் சில பகுதிகள் இன்னும் கூகுள் மேப்ஸால் இன்னும் சரியாக வரைபடமாக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கூட அந்த நபர் ஆற்றில் விழுந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆற்றின் அருகில் தரைப்பாலம் இருந்தும் அதனை கருத்தில் கொள்ளாமல், கூகுள் மேப்ஸ் காட்டும் திசையில் தான் போவேன் என்று வைராக்கியத்துடன் சென்று ஆற்றில் மூழ்கிய நபரை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.