கொரானா தொற்றால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துள்ளது. ஆனால் நிலைமை கவலைக்கிடமாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை ஹூபேய் மாகாணத்தில் ஆயிரத்து 638 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இது குறைவு என்பதால், கொரானா வைரசின் பரவல் குறைந்து வருவதன் அறிகுறியாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதே சமயம் ஊகான் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அறிகுறிகளுடன் வரும் பலர் மருத்துவர்களை காண முடியாமல் திரும்பவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனிடையே கொரானா தொற்றை தடுக்கும் நோக்கில் சீனாவில் இன்டர் சிட்டி மற்றும் நாடு முழுவதும் ஓடும் அதிவேக ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்வதற்கும், உணவு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான சீனர்கள் தங்களது விழாக்கால பயணங்களை பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊர்களுக்கு முன்னதாகவே திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரானா தொற்றால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் தலா ஒருவர் என உலக அளவில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் 44 ஆயிரத்து 653 பேருக்கும், 27 வெளிநாடுகளில் 518 பேருக்கும் என மொத்தம் 45 ஆயிரத்து 171 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்று நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது.
இதனிடையே வேகமாகப் பரவி வரும் இந்த கொரானா தாக்குதலுக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) கோவிட்-19 (Covid-19,) என்று நேற்று பெயரிட்டது. ஜெனீவாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், 2019 ல் பரவிய கொரானாவைரஸ் நோய் என்பதை குறிக்கும் வகையில் இந்தப் பெயர் இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்கும் நடவடிக்கையாக, ஊகான் நகர் மற்றும் ஹுபேய் (Hubei) மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.