சீனாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய கப்பலில் இருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய மரணக்கிருமியான கொரோனா தனது கொடூரமான கரங்களை வேகமாக வீசியபோதுதான் அதன் வீரியம் மக்களுக்குப் புரியவந்தது.
என்வென்று அறிந்து கொள்ளும் முன் கொத்துக் கொத்தாக, கும்பல் கும்பலாக மக்கள் மடிந்து விழுந்த போதுதான் கொரேனாவின் அரக்க நிலை கண்டு அகிலமே அரண்டு போனது.
மக்கள் நடமாட்டமின்றி, வாகனப் போக்குவரத்தின்றி வூகான், வூவே, ஹூவாங்காங் நகரங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
உலகம் முழுவதும் 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் ஆயிரத்து 111 பேரும் வெளிநாடுகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விஷக்கிருமியால் சீனாவில் மட்டும் 44 ஆயிரத்து 360 பேர் உள்பட பல்வேறு நாடுகளில் 44 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானில், 3 ஆயிரத்து 700 பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ள, "தி டைமண்ட் பிரின்சஸ்" சொகுசு கப்பலில், மேலும் பலருக்கு கொரோனா பரவியிருக்க கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தக் கப்பல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஹாங்காங் துறைமுகத்தில் 5 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தி வேல்டு டிரீம் சொகுசு கப்பலில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர்.
இதேபோன்று ஹாங்காங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த "தி வெஸ்டர்டேம்" சொகுசுக் கப்பலில் உள்ள 3,600 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின், உயர்மட்ட ஆய்வுக்குழு ஒன்று, சீனா வந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு, பன்னாட்டு சமூகத்திற்கு "மிகவும் கடுமையான அச்சுறுத்தல்" என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில், கொரோனா பாதிப்பு, ஏப்ரலுக்குள் முடிவுக்கு வரலாம் என அந்நாட்டின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஜோங் நான்சென் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இருப்பினும், கொரோனா பாதிப்பு இம்மாதம் உச்சம் அடைய வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் சீனாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையும் 77 வளரும் நாடுகளும் துணை நிற்பதாக ஆதரவளித்துள்ளன.
உலகளாவிய சுகாதார சவாலை எதிர்த்துப் போராடுவதில் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கவலை கொள்ளச் செய்வதாக ஜி 77 அமைப்பின் தலைவரும், கயானாவின் ஐநா பிரதிநிதியுமான ருடால்ப் மைக்கேல் தெரிவித்துள்ளார்.