இந்தோனேசியாவில் ரூடி ஹார்ட்டோனோ எனும் இளைஞர் ஸ்பைடர் மேன் உடையணிந்து குப்பைகளை அகற்றி வருகிறார்.
உலக அளவில் மக்கள்தொகையில் நான்காவது இடத்தை பெற்றுள்ள இந்தோனேசியாவில் வருடத்திற்கு சுமார் 3.2 மில்லியன் டன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதில் பாதி அளவிலான குப்பைகள் கடலிலும் நதிகளிலும் கலப்பதாகவும் 2015 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் இதனை தடுக்கவும் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தோனேசியாவில் 36 வயதான ரூடி ஹார்ட்டோனோ எனும் இளைஞர் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார்.
தேனீர் கடையில் வேலை செய்யும் ரூடி ஹார்ட்டோனோ தனது வேலை நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை வீணாக்காமல், தான் வசிக்கும் பகுதியான பரேபரியில் நதிகளிலும் கடலிலும் கலக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார். இது குறித்து ரூடி ஹார்ட்டோனோ கூறுகையில் "முதலில் தான் சாதாரண உடையிலேயே குப்பைகளை அகற்றி வந்ததாகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்பைடர் மேன் உடையணிந்து குப்பைகள் அகற்றிய பின்னர் மக்கள் பெரும் வரவேற்பு அளிப்பதாகவும்" தெரிவித்தார்.