அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகின்ற 24ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பது உறுதியாகியுள்ளது. அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக 24 மற்றும் 25 ஆகிய நாட்கள் இந்தியா சுற்றுப் பயணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும், இருதரப்பு உறவுகள் வலுப்படும் வகையிலும், இரு நாட்டு மக்களின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த பயணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி, டிரம்ப் சந்திப்பின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமாக வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு எஃகு இறக்குமதிக்கு 25 சதவீதம் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதம் உலகளாவிய கூடுதல் கட்டணங்கள் விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக 28 தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக கட்டணங்களை விதித்தது.
இது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததால் சமீபத்தில் அமெரிக்கா தனது வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பினை திரும்ப பெறுவது குறித்தும் டிரம்ப் பயணத்தின் போது பேசப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மோடி அமெரிக்கா சென்ற போது மோடி நலமா? என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. அதேபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிரம்பின் இந்தியா வருகை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.