உத்திரப்பிரதேச மாநிலங்களில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் வரும் 2021ம் ஆண்டிற்குள், வானொலி நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்ட சிறையில் சமீபத்தில் வானொலி நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சிறைச்சாலைகளில், 26-வதாக மீரட் சிறையில் வானொலி நிலையம் துவக்கப்பட்டது.
பாடல்கள் தவிர...
கைதிகளின் விருப்பத்திற்கிணங்க பாடல்களை ஒலிபரப்புவதை தவிர கைதிகளின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பற்றிய தகவல்களும் இடையிடையே வாசிக்கப்படும். சட்டரீதியிலான தீர்வுகளை கைதிகளுக்கு எடுத்து சொல்ல கூடிய வகையில், நிபுணர்களுடனான கலந்துரையாடல் ஒலிபரப்பப்படும் என கூறியுள்ளனர் அதிகாரிகள்.
நீதிமன்ற விசாரணை அறிவிப்புகள்...
அதே போல தனிப்பட்ட கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான அறிவிப்புகள், சிறைக்குள் நடைபெறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பற்றியும் வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எதற்காக வானொலி நிலையங்கள்..?
சிறையில் உள்ள நிறைய கைதிகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தில் தவிக்கின்றனர். எனவே அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சிறிது பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். அப்படி செய்வதால் அவர்களின் மன சோர்வை நீக்கி உற்சாகப்படுத்த முடியும். அதன் விளைவாகத்தான் சிறைச்சாலைகளில் வானொலி நிலையங்களை அமைப்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
சிறைச்சாலையில் அமைக்கப்படும் உள்வானொலி நிலையங்களை நடத்த, கைதிகளையும் பயன்படுத்தி கொள்கின்றனர். ஆர்வம் மற்றும் திறமையுள்ள கைதிகளுக்கு சிறைகளுக்கே நேரடியாக வந்து தொழில் முறை பயிற்சி அளிக்க பல ரேடியோ ஜாக்கிகள் உதவுகின்றனர்.
எப்படி இயங்கும்?
குறிப்பிட்ட frequency-யில் செயல்படும் வழக்கமான வானொலி நிலையங்கள் போல் இல்லாமல், customised public address systems சிறைகளில் அமைக்கப்படும் ரேடியோ நெட்ஒர்க்கில் பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ ஜாக்கி மற்றும் வானொலி நிலையத்திற்கென்று அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அறைகளிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
70 சிறைகளிலும்..
கைதிகள் தாங்கள் விரும்பும் பாடல்களை எழுத்தின் மூலம் ஒலிபரப்ப கோரிக்கை விடுக்கலாம். பாடல்களை ஒலிபரப்பும் முன் அதனை கேட்ட கைதிகளின் பெயரை ரேடியோ ஜாக்கி அறிவிப்பார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 70 சிறைகளிலும் வானொலி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விரைவில் உள்வானொலி நிலையம் அமைக்கப்படும் என சிறைத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.