அரசு வேலைகள் மற்றும் பதவி உயர்வுகளில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கோ அல்லது ஓபிசி பிரிவினருக்கோ மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில அரசால் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், அந்த அறிவிப்பை ரத்து செய்ததுடன், இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின்போது உத்தரகண்ட் மாநில அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 16ஆவது பிரிவிலுள்ள 4ஆவது உட்பிரிவு, 4 ஏ உட்பிரிவு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அளிக்காமல், அரசு பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு அளிக்கவும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அடிப்படை உரிமையாக இடஒதுக்கீட்டை தனிநபர்கள் கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 2012ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் அரசு பணிகளை நிரப்ப உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என்றும், அதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு செல்லாது என்றும் அறிவித்தனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் 16ஆவது பிரிவிலுள்ள 4ஆவது உட்பிரிவு, 4ஏ உட்பிரிவு ஆகியவற்றில், அரசு பணியிட நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், ஆதலால் அதை அமல்படுத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.