10 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும் குண்டு துளைக்காத உலகின் முதல் ராணுவ பயன்பாட்டு ஹெல்மட்டை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.
ராணுவத்தில் மேஜராக இருக்கும் அனூப் மிஸ்ரா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக குண்டு துளைக்காத கவச ஆடையை தயாரித்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் டெஃப்எக்ஸ்போ 2020-ல் புதிய வகை ராணுவப் பயன்பாட்டு ஹெல்மட் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு கிலோ 400 கிராம் எடைகொண்ட பாலிஸ்டிக் வகை ஹெல்மட் ஏகே 47 ரக துப்பாக்கியால் 10 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதனையும் மேஜர் அனூப் மிஸ்ராவே வடிவமைத்துள்ளார். புனேவில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரியும், தனியார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த வகை ஹெல்மட்கள் குறைந்த விலைக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஹெல்மட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்றும், தீவிரவாதிகளை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.