இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சரிவில் இருந்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இயல்பான திறன் அதற்கு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்திய பொருளாதாரம் சரிந்து வருவதாக எதிர்கட்சிகள் செய்து வரும் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்தார்.
இந்திய பொருளாதாரம் மீண்டெழும் திறன் வாய்ந்தது என்று குறிப்பிட்ட அவர், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைப்பது பேராசை போல தோன்றினாலும், எதையும் பெரிதாக திட்டமிட்டு முன்னேறுவதுதான் நமது இலக்கு என்றார்.
தமது உரையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மோடி, அதன் பாணியில் தமது அரசு செயல்பட்டிருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக், 370 ஆவது பிரிவு ரத்து போன்ற எந்த சாதனையையும் படைத்திருக்க முடியாது என்று பெருமிதம் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்களைத் தூண்டி விட்டு நாட்டில் மதப்பிரிவினையை காங்கிரஸ் வளர்ப்பதாக மோடி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை, முஸ்லீம்களாக மட்டுமே பார்த்தது என்ற அவர், தமது தலைமையிலான அரசு அவர்களை இந்தியர்களாக பார்க்கிறது என்று கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அரசியலமைப்புச் சட்டம் சீரழிந்து விட்டது என்று குற்றம் சாட்டும் காங்கிரஸ், அவசர நிலையை பிறப்பித்ததன் வாயிலாக அதற்கு இழைத்த அநீதியை மறந்து விட்டு பேசுகிறது என்றும் பிரதமர் சாடினார்.