சீனா உட்பட பல உலகநாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. சீனாவை மையமாக கொண்டு பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸ் விலங்கிடமிருந்தது, மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது.
உறுதி இல்லை:
சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவ துவங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்நகரில் விற்கப்பட்ட வெளவால்கள் மூலம் இந்த கொடிய வைரஸ், மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என வலுவாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
அச்சுறுத்தும் வெளவால்கள்:
சார்ஸ் மற்றும் மெர்ஸ் உள்ளிட்ட பல கொடிய வைரஸ்கள் வெளவால்கள் மூலமே பரவியதாக கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதே போல நிபா , எபோலா போன்ற வைரஸ்கள், பழம்தின்னி வெளவால்கள் மற்றும் மற்றும் மனித குரங்குகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
அதே போல 1980-களில் பரவி மனித குலத்தை பயங்கரமாக அச்சுறுத்திய எச்.ஐ.வி / எய்ட்ஸ் குரங்கு வகை ஒன்றிடமிருந்து பரவியது. மேலும் கடந்த 2009ம் ஆண்டு பரவிய swine flu எனப்படும் பன்றி காய்ச்சல், பன்றிகளிடமிருந்து பரவி அச்சுறுத்தியது.
வலுவாகும் வைரஸ்கள்:
இதுவரை பேராபத்தை ஏற்படுத்திய பல வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்கு பரவியுள்ளன. வைரஸ் கிருமிகளில் காணப்படும் மரபணுக்கள் மேற்பரப்பில் தான் கொண்டிருக்கும் புரதங்களின் தன்மையை வீரியமாக்கி கொள்ள, பல மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட வைரஸானது மற்றொரு புதிய உயிரினத்தின் செல்கள் மீது அதிக விளைவுகளை ஏற்படுத்த ஏதுவாக நிகழ்கிறது.
இலக்காகும் உயிரினங்கள்:
இதனால் அதிக வீரியத்துடன் புதிய பரிணாமம் பெறும் நோய் பரப்பும் வைரஸ்கள், சுவாசக் குழாயை முதலில் பாதிக்கும் இனங்களின் உடலில் தீவிரமாக பரவுகிறது.
மனிதர்களை தாக்கும் முன்..:
பெரும்பாலான வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் முன், மற்றொரு உயிரினங்களுக்கு பரவி தன்னை மனிதர்களின் உடலை தாக்குவதற்கு ஏற்றவாறு தயார்படுத்தி கொள்கின்றன. SARS-ஐ பொறுத்தவரை, முதலில் வெளவால்களை பாதித்தது, பின்னர் civet என்ற பூனை இனத்திற்கு பரவி இறுதியாக தான் மனித இனத்தை தாக்கியது.
உறுதியாகவில்லை..
அதே போல மெர்ஸ் வைரஸ் தாக்கிய போது வெளவால்களிடமிருந்து ஒட்டகங்களுக்கு பரவி பின் மனிதர்களை பாதித்தது. தற்போது உலக நாடுகளை பயமுறுத்தியுள்ள கொரோனா, விலங்கிடமிருந்து நேரடியாக பரவியதா அல்லது இடையில் வேறு உயிரினத்திற்கு சென்று, பின் மனிதர்களை தாக்கியதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை