அதிக காற்று மாசுவை ஏற்படுத்தியதால் இந்தியாவில் 14 நிலக்கரி எரிமின் நிலையங்களை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தலைநகர் டெல்லியைச் சுற்றியுள்ள ஒன்பது நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களும், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 5 நிலையங்களும் இணைந்து நாட்டின் எரிமின் உற்பத்தியில் 7 விழுக்காடு மின் உற்பத்தியைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட நிலக்கரி எரிமின் நிலையங்கள் அதிக காற்று மாசுவை ஏற்படுத்தியதற்காக கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள ராய்டர்ஸ் நிறுவனம், இதற்கு முறையாக பதிலளிக்காத பட்சத்தில் இந்த எரிமின் நிலையங்களுக்கு அதிகபட்சத் தொகை அபராதமாக விதிக்கவோ அல்லது இழுத்து மூடவோ தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.