நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த மனுவை சிறப்பு அமர்வின் முன்பு விசாரணை நடத்திய நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரி 7ம் தேதி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான அக்சய் குமார், வினய்குமார் சர்மா, முகேஷ்குமார் சிங், மற்றும் பவன் குப்தா ஆகியோரை 22ம் தேதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கு உத்தரவு வழங்கியது.
குற்றவாளிகள் சார்பில் தண்டனையை நிறுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மனுவை விசாரணைக்கு ஏற்ற டெல்லி நீதிமன்றம் ஜனவரி 31ம் தேதி நான்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.