சீர்மிகு நகரத் திட்டம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 100 பெருநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீர்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் இரண்டாம் கட்டமாக சேலம் மாநகரம் தேர்வு செய்யப்பட்டு 945 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வித் தரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தொடங்கி இந்த கருத்துக்கணிப்பு வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி ஜெயராம் கல்லூரியில் மாணவிகளுக்கு கருத்துக்கணிப்பு தொடர்பான இணையதளம் குறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனது நகரம், எனது பெருமை என்ற தலைப்பின் கீழ் அந்த இணையதளத்தில் பொதுமக்களும் மாணவர்களும் மாநகராட்சிக்கு என்னனென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என கருத்துக்களை பதிவிடலாம். அதற்கான வழிமுறைகள் மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டன.