வரும் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதில், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தியாவில் முதலீடு வாய்ப்புகள் குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்காத பொருளாதார மந்தநிலையை இந்தியா எதிர்கொள்ள நேரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி எனப்படும் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் ஓரளவு மீண்டு, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6 முதல் 6.5 சதவீதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டம், பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, எளிதாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்வதே வர்த்தக பிரச்சனைகள், அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம், வளரும் நாடுகளின் பொருளாதார சுணக்கம் ஆகியவை வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய தொழில் தொடங்க குறைந்தது 18 நாட்களும், 10 விதமான நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உணவு விடுதி தொடங்க வேண்டும் என்றால், 45 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், அதே சமயம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு 19 ஆவணங்கள் அளித்தால் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் புதிய தொழில் தொடங்க ஒரே ஒரு விண்ணப்பம் அளித்தாலே அனைத்து பணிகளும் அரைநாளில் முடிந்து விடும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் துவங்குவது, சொத்துக்கள் பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தம் போன்றவைகளின் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளின் விலையை கட்டுமான நிறுவனங்கள் குறைத்தால் விற்பனை அதிகரித்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத வீட்டுக்கடன் நிறுவனங்களின் நிதிநிலைமை மேம்படும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு துறையில், தனியார் உதவியுடன் அதிக அளவிலான முதலீடுகளை அரசு செய்ய உள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.