இந்தியாவின் முதல் கொரானா வைரஸ் நோயாளிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நல்ல பலனை தருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கேரளத்தில்தான் கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வூகான் பல்கலைக்கழக மாணவி சீனாவில் இருந்து கேரளாவில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.கே.ஷைலஜா, கொரனா பாதித்த மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். அவரது நோய் அறிகுறிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நல்ல பலனை தருவதாகவும், இந்த சிகிச்சையை கண்காணித்து ஆய்வு செய்வதற்காக தனி மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க தனியார் மருத்துவமனைகளும் உதவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரானா பாதிப்பு தொடர்பாக கேரளத்தில் மொத்தம் ஆயிரத்து 56 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரானா வைரஸ் தொற்றியுள்ள இளம்பெண் சுற்றுப்புறத்தில் இருந்தவர்களும் கண்காணிப்பில் இருப்பதே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்றும் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.
கண்காணிப்பில் உள்ளவர்களில் 15 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரின் ரத்த மாதிரிகள் புனே வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த 3 பேரில் இருவர், கொரனா வைரஸ் பாதித்த இளம்பெண்ணுடன் கடந்த வாரத்தில் பயணம் செய்தவர்கள்.
இதனிடையே, கொரானா வைரஸ் தொற்றியுள்ள இளம்பெண் முதன் முதலில் சிகிச்சைக்கு வந்தபோது எவ்வித தாக்கமும் தெரியவில்லை என வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் மூச்சுவிடுவதில் சிரமம், தொண்டை வலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டுள்ளதோடு, கேரள மாநிலம் ஆலப்புழையில் வைரஸ் சோதனை மையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவக் கல்லூரி வைரஸ் துறை நிபுணர்கள், 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிபா வைரஸ் பாதிப்பின்போது மும்முரமாக பணியாற்றிய கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையின் உதவியையும் கேரள அரசு நாடியுள்ளது.
இதேபோல, கொரனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள முறையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், ஹோமியோபதி அல்லது யுனானி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஹோமியோபதி, யுனானி மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.