சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்தில் பயின்று கேரள திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர், கொரோனா வைரஸ் பாதிப்புடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, அங்குள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊகான் நகர பல்கலை கழகத்தில் படித்த கேரளா மாநிலத்தின் திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சமீபத்தில் ஊர் திரும்பினார்.
அங்கிருந்து ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு காய்ச்சல், ஜலதோஷம் ஏற்பட்டதை அடுத்து திருச்சூர் மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அவரச ஆலோசனை நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, கொரோனா பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரின் மாதிரிகள் புனேவுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் சீனாவில் இருந்து திரும்பிய 430 பேர் கேரளத்தில், தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சைலஜா தெரிவித்தார்.
இதற்கிடையே, சீனாவில் இருந்து திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருச்சூரில் அளிக்கப்படும் சிகிச்சையில், முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையினருடன் மீண்டும் அவசர ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷைலஜா, மாணவியின் உடல்நிலை தேறி வருவதால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட இருப்பதாக தெரிவித்தார்.
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஷைலஜா தெரிவித்தார். மொத்தம் 15 பேரின் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் அதில் 9 பேரை தனி வார்டுகளில் வைத்துள்ளதாகவும் மற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதாகவும் ஷைலஜா தெரிவித்துள்ளார்.