சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை தொடங்கி இருக்கிறது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு உள்ள நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனோ வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் கொரோனோ வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விமான நிலையங்களிலேயே உரிய சோதனைக்குப் பிறகே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
சீனாவின் ஊஹான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரும்பிய 430 பேர் கேரளாவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர், பாட்னா, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 12 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவின் ஹூபேய் மாநிலத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அரசு மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள், 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனிடையே சீனாவில் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பிஜிங்கில் உள்ள இந்திய துணை தூதர் இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், தமிழக மாணவர்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.