வரலாற்று அநீதியை சரிசெய்வதற்காகவும், பாஜகவின் பழைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும், குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
என்சிசி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டிற்கு தீராத தொல்லையாக உள்ள பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமது அரசு முயற்சிப்பதாக கூறினார்.
இந்தியாவிடம் மூன்றுமுறை போரில் தோற்றுப்போன பாகிஸ்தான், மறைமுகப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
முந்தைய அரசுகள் காஷ்மீர் பிரச்சனையை சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக பார்த்ததுடன், ராணுவம் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்துவந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது ஜம்மு-காஷ்மீர் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளும் அமைதியாக இருப்பதோடு, இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களின் விருப்பங்களை அரசு நிறைவேற்றி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
போடோ ஒப்பந்தம், முத்தலாக் முறை ஒழிப்பு, 370ஆவது பிரிவு ரத்து உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளையும் மோடி பட்டியலிட்டார்.