மனதிற்கு உற்சாகத்தையும், ஆர்ப்பரிப்பையும் தரக்கூடிய கடலானது தன்னகத்தே பல ரகசியங்களை புதைத்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் மீளலை நீரோட்டம். கடலில் இறங்குபவர்களின் உயிரை பறிக்க கூடிய மீளலை நீரோட்டம் என்பது, கடலுக்கடியில் கண்ணுக்கு தெரியாமல் திடீரென ஏற்படும் வேகமான நீரோட்டம் ஆகும்.
வங்காள விரிகுடா சமுத்திரத்தில் குளிக்கவும், நீச்சல் அடிக்கவும், பொழுது போக்கவும் செல்லும் இளைஞர்கள் பலர் அதிகளவில் உயிரிழப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு Rip Current என்னும் மீளலை நீரோட்டமே காரணமாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இருக்காது:
மீளலை நீரோட்டங்கள் கடற்கரை பகுதியிலேயே ஏற்படும். சாதாரணமாக எழும்பும் கடல் அலைகளை போல இவை தொடர்ச்சியாக இருக்காது. கடற்கரையை அது மோதுவது என்பது இடைவெளி விட்டு விட்டே நிகழும். மேலும் மீளலை நீரோட்டம் எப்போது, எப்படி ஏற்படும் என்பதை கணிப்பது சவாலான ஒன்று என்று குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள்.
கண்களை ஏமாற்றும்:
கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு கடலில் அலை எதுவும் அடிக்காமல் சாதாரணமாக உள்ளது என்பது போலவே தெரியும். இதனை நம்பி சரி நீச்சல் அடித்து விளையாடலாம் அல்லது கடல் நீரில் ஆனந்த குளியல் போடலாம் என்றெண்ணி உள்ளே இறங்கி விடுவார்கள்.
அதிவேக நீரோட்டம்:
ஆனால் அங்கு யாரும் எதிர்பார்க்காதவாறு கடலுக்கடியில் அதிவேகமான நீரோட்டம் இருக்கும். மீளலை நீரோட்ட அலையானது மிக குறுகலாகவும், நீளமாகவும் அதே சமயம் வேகமாகவும் இருக்கும்.இந்த வேகமான நீரோட்டத்தில் இறங்குபவர்கள் இழுத்து செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுவார்கள். பல சமயங்களில் அலையற்ற பகுதிகளில் மீளலை நீரோட்டம் உள்ளிட்ட ஆபத்தான நீரோட்டங்கள் கண்களுக்கு புலப்படாமல் உயிர்களை பலி வாங்க காத்திருக்கின்றன.எனவே கடலில் அலையற்ற பகுதியில் ஆபத்தில்லை என்ற எண்ணம் தவறானதாகிவிடுகிறது.
மீள்வது கடினம்:
நீச்சலில் கை தேர்ந்தவர்களாலேயே இந்த மீளலை நீரோட்டத்தில் இருந்து மீண்டு கரைக்கு வருவது மிக கடினம். இது போல மீளலை நீரோட்டம் இருக்கும் கடற்கரை பகுதிகளில் பொதுவாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
பதற்றப்படாமல் இருந்தால் தப்பிக்க வாய்ப்பு:
ஒரு வேளை மீளலை நீரோட்டத்தில் சிக்கினால் முதலில் செய்ய வேண்டியது பதற்றத்தை விடுவது. அடுத்து முக்கியமாக செய்ய வேண்டியது கரையை நோக்கியோ அல்லது எதிர் திசையிலோ நீச்சல் அடித்து தப்பிக்க முயல கூடாது.
என்ன செய்ய வேண்டும்?:
மீளலை நீரோட்டத்தில் மாட்டி கொண்டால் அலையின் இறுக்கமான பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் பக்கவாட்டிலோ அல்லது அலை இழுத்து செல்லும் திசையிலோ செல்ல வேண்டும் என கூறுகிறார்கள் கடல் ஆய்வாளர்கள். ஏனென்றால் மனிதர்களை இழுத்து செல்லும் மீளலை நீரோட்டம் சிறிது நேரத்தில் வலுவிழந்து விடும். அதுவரை தாக்குபிடித்து விட்டால் நிச்சயம் தப்பித்து கரைக்கு வந்துவிடலாம் என கூறுகின்றனர் நிபுணர்கள்.
மாற்றங்களால் அதிகரிப்பு:
உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய கடலடி நீரோட்டம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெப்பமயமாதல், கடலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கடலடி நீரோட்டம் அதிகரித்து காணப்படுகிறது.