டிராவல் ஏஜெண்டிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த டேனிஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சகாப் ஒய் முகமது (Shahab Y Mohammed) என்பவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அதில் கடந்த நவம்பர் மாதத்தில் சுதீஷ் அவிக்கல் (Sudheesh Avikkal) என்பவர் தனக்காகவும், அசாருதீன், அவரது உதவியாளர் முஜிப் கான் ஆகியோருக்காகவும் துபாய், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், இதற்கான 21 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன்பேரில் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.