காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என்று மீண்டும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து நகரான டாவோசில் உலகப் பொருளாதார மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். மேலும் அமெரிக்காவை தவிர வேறு எந்த நாடும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்த்து வைக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிரம்பிடம் வலியுறுத்தினார்.
அப்போது இந்தப் பிரச்சினையில் ஏதோ ஒருவகையில் உதவ விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்த போதும் ஏழாவது முறையாக டிரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இருதரப்பு விவகாரம். இதை பாகிஸ்தான் மற்றும் இந்தியா பேசி தீர்த்து கொள்ளும். இந்த விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் முதலில் அந்நாடு பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். ஏனென்றால் எப்போதும் அமைதி பேச்சும், பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.