ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டத்திற்கு மாநில சட்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சி முட்டுக் கட்டை போட்டுள்ளது.
ஆந்திராவின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், நீதி நிர்வாக தலைநகராக கர்நூலையும், தலைமைச் செயலக நகராக அமராவதியையும் உருவாக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு, அதற்கான சட்ட மசோதா, ஆந்திர சட்டப்பேரவையில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே திங்கள் இரவு நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து சட்ட மேலவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரும்பான்மையாக இருக்கும் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு சட்ட மேலவை தலைவர் எம்.ஏ.ஷெரீஃப் அனுமதி அளித்ததை கண்டித்து மாநில அமைச்சர்களும் இதர ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.அமளியை அடுத்து சட்ட மேலவை ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. 58 உறுப்பினர் ஆந்திர மேலவையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.