தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான விண்ணப்பத்தில், குடிமக்களின் தாய் தந்தையரின் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட விவரங்களை கேட்கக்கூடாது என்று பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை, அரசு ஏற்கும் என, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பல வகையான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதற்கான விண்ணப்பத்தை இது வரை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. அதே சமயம் பெற்றோர் குறித்த தகவல்களை அளிக்க முடியாவிட்டால், மக்கள்தொகை பதிவேட்டில் இடம் பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் பலரிடம் நிலவுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தமது பெற்றோர்களின் பிறந்த தேதியோ, பிறந்த இடமோ தமக்குக் கூடத் தெரியாது. அதனால் நான் இந்திய குடிமகன் இல்லை என்று சொல்லிவிடுவார்களா? இது போன்ற விஷயங்கள் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் என நான் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தேன்.
அவர்கள் அதற்கேற்றவாறு தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்து வருகிறது. எனவே பெற்றோரின் விபரங்கள் தெரியவில்லை என பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறி இருக்கிறார்,.