இணையம் மூலமாக ரயில்வே டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்த மோசடி கும்பல் சிக்கியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார், துபாயை சேர்ந்த கும்பல் ஒன்று இந்த இணைய வழி ரயில் டிக்கட் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். விற்பனை செய்த பணம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் பின்னர் ஹவாலா மூலம் துபாய்க்கு கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் இக்கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், இப்பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக ஹமீத் அஷ்ரப், குலாம் முஸ்தபா என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹமீத் துபாயில் இருந்தபடி போலி ரயில் டிக்கட் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கும்பல் ஒரு மாதத்தில் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை டிக்கட்டுகளை முன்பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய முறைகேடால் இந்திய ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய்க்கு இழப்பு நேரிட்டுள்ளது.