ஐம்பதாயிரம் கோடி ரூபாயில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பி 75 ஐ ((P-75I)) என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் டீசல், எலக்ட்ரிக் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இரு கப்பல்கட்டும் தளங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இவற்றை தயாரித்து வழங்குவதற்கான பட்டியலில் இந்திய நிறுவனங்களுடன், பன்னாட்டு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை 5 ஆயிரத்து 100 கோடி செலவில் வாங்க பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன எலக்ட்ரானிக் போர்தளவாடங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. போர் விமானங்களை உற்பத்தி செய்யவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.