சர்வதேச பொருளாதார வளர்ச்சி தாழ்ந்து காணப்பட்டாலும், பன்னாட்டு பெருநிறுவன தலைமை செயல் அதிகாரிகளின் பார்வையில், முதலீட்டுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து நான்காவது இடத்தைப் பிடித்து, இந்தியா சாதனை படைத்துள்ளது.
பல நாடுகளை பொருளாதார சரிவு வாட்டி வரும் நிலையில், புதிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து தாவோஸில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் வருடாந்திர ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதலீட்டுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. 2020 ஆம் ஆண்டு லாபகரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை 27 சதவிகித பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைவானதாகும்.
உள்நாட்டு நிறுவனங்களைக் பொறுத்தவரை, இந்திய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என 40 சதவிகித அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளனர். 45 சதவிகிதம் என்ற அளவுடன் சீன நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. சீனா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா,கனடா,பிரிட்டன்,ஜெர்மனி,பிரான்சு ஆகிய முக்கிய பொருளாதார வல்லரசு நாடுகள் உள்ளன.மிகவும் குறைந்த அளவான 11 சதவிகித நம்பிக்கையை ஜப்பான் நிறுவனங்கள் வெளிப்படுத்தி உள்ளன.
அதைப் போன்று, சர்வதேச பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சியை சந்திக்கும் என்று தலைமை செயல் அதிகாரிகளில் 59 சதவிகிதம் பேர் கணித்துள்ள நிலையில், அது வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று 22 சதவிகிதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ல் 59 சதவிகித சீன தலைமைச் செயல் அதிகாரிகள், முதலீட்டுக்கான முதல் 3 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை விரும்பினர்.
இந்த ஆண்டு அது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதற்குப் பதிலாக அவர்கள் இப்போது ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி உள்ளனர். சர்வதேச பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் நேற்றே கூறியுள்ள நிலையில், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. 83 நாடுகள் மற்றும் தொழில் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 தலைமைச் செயல் அதிகாரிகளிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.