ஏற்கனவே 16 மாநிலங்களில் அமலில் இருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாடக் கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கும் வகையில் இந்த த் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, அரியானா,கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,தெலங்கானா, குஜராத், திரிபுரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே இது நடைமுறையில் வந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இது நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சுமார் 81 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்ற அவர், இந்த த் திட்டத்தில் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்காக அனைத்து நியாய விலைக்கடைகளிலும் மின்னணு சாதன உதவியுடன் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பொருள்கள் வழங்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.