ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அமராவதியை தலைநகராக நிர்மாணிக்க இடம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.விவசாயிகளும், தெலுங்கு தேசம் கட்சியினரும் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவை நடவடிக்கைகளில் குறுக்கிட்டதாகக் கூறி தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை மங்களகிரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் நள்ளிரவில் விடுவித்தனர்.
இதனிடையே, 12 மணி நேர விவாதத்திற்குப் பின் ஆந்திராவில் 3 தலைநகர்களை உருவாக்க வகைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆந்திர மேலவையில் ஜெகன்மோகன் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இன்று இந்த மசோதா மேலவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.