மத்திய நிதியமைச்சகத்தில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அச்சேற்றும் பணிகளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களுக்கு அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்.
வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, அச்சிலேற்றும் பணிகள் துவங்க உள்ளன.
நிதியமைச்சகத்தில் உள்ள, பிரத்யேக அச்சகத்தில் பட்ஜெட்டை அச்சேற்றும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை வெளி உலக தொடர்புகளன்றி இருப்பார்கள், இதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாரம்பரியமாக அல்வா கிண்டி பரிமாறப்படுகிறது. அந்த வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களுக்கு அல்வா வழங்கி பட்ஜெட்டை அச்சேற்றும் பணிகளை தொடங்கி வைத்தார்.