பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று தாக்கல் செய்தார்.
பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2ஆவது முறையாக அமைந்த புதிய மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து பாஜக இடைக்கால தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேசியத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்படும் என்று பாஜக தலைமை அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி பாஜக தலைமையகத்தில் இன்று அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜே.பி. நட்டா காலையில் தாக்கல் செய்தார். அவரது சார்பாக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் மனுவை தாக்கல் செய்தனர்.
பாஜகவை பொறுத்தவரை கருத்தொற்றுமை அடிப்படையில் போட்டியின்றி ஒருமனதாக கட்சியின் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவதே வழக்கமாகும்.
வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நட்டாவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆதரவு இருப்பதாக நம்பப்படுவதால் அப்பதவிக்கு அவர் தேர்வாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் மனுவை தாக்கல் செய்யவில்லையெனில், இன்றே அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.