திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று முதல் அமலாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்து பெற்றதாகும். அதன்படி கோயிலில் இலவச தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 70 ரூபாய்க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. அதேநேரத்தில் மலைபாதை வழியே கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுவது போல, அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இலவச லட்டு போக கூடுதலாக லட்டு பெற விரும்பும் பக்தர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் லட்டு பெற விரும்புவோருக்காக கோயிலுக்கு வெளியே 12 லட்டு விற்பனை கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 50 ரூபாய் செலுத்தினால் பக்தர்களுக்கு தலா 1 லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
Also Read : பழனி முருகன் கோயிலில் மூலவர் சிலைக்கு மருந்து சாத்தப்படுவதால் நடை அடைப்பு