ஒடிசா மாநிலத்தில் ரிக்ஷா இழுப்பவருடன் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்ட பிச்சைக்காரர் ஒருவர், சரளமாக ஆங்கிலத்தில் பேசியது மற்றும் எழுதியதை கண்டு அம்மாநில போலீசார் ஆச்சரியமடைந்தனர்.
பின்னர் அவரின் ஆங்கில புலமை குறித்து விசாரித்த போது தான், அந்த பிச்சைக்காரர் ஒரு பொறியியல் பட்டயதாரி என்பது தெரிய வந்துள்ளது. ஒடிசாவின் பூரி நகரில் ஸ்ரீ ஜெகந்நாத் கோயிலின் வாசலில் பிச்சை எடுத்து வந்த 51 வயதான நபர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவருக்கும் கைவண்டி இழுக்கும் ஒருவருக்கும், கோயில் வாசலிலேயே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றியதில் இருவரும் நடு ரோட்டில் கட்டி புரண்டுள்ளனர்.
இந்த மோதலில் இருவருக்குமே பலத்த காயங்கள் ஏற்பட்டது. சண்டை குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த அவர்கள், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று புகார் கடிதம் எழுதி தர சொன்னார்கள்.
அப்போது பிச்சைக்காரரான கிரிஜா சங்கர் புகார் கடிதத்தை தெளிவாக, பிழை இல்லாமல் அழகாக ஆங்கிலத்தில் எழுதி கொடுத்துள்ளார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த காவலர்கள் அவரின் கடந்த காலம் பற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது தான் அந்த பிச்சைக்காரரான கிரிஜா சங்கர், தான் ஓய்வு பெற்று மறைந்த போலீஸ் அதிகாரியின் மகன் என கூறியுள்ளார். தனது தாயும் மறைந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் தான் BSc படித்துள்ளதாகவும், மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேருவதற்கு முன்னர் பொறியியல் கல்லூரி ஒன்றில் டிப்ளோமா பயின்றதாகவும் கூறி வியக்க வைத்துள்ளார்.
கடைசியாக ஹைதராபாதில் ஒரு நல்ல நிறுவனத்தில் நிறைவான சம்பளத்தில் வேலையில் இருந்துள்ளார். அதன் பிறகே அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி பூரிக்கு வந்து பிச்சை எடுக்க துவங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு ஏன் வந்தீர்கள் என்ற கேள்விக்கு உரிய பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். அது என் தனிப்பட்ட விஷயம். இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில், பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டிப்ளோமா படித்து முடித்தேன். பின்னர் பணி புரிந்த நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலால் வேலையை விட்டு விட்டேன். இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
வெளிப்படுத்த முடியாத சில விஷயங்கள் என் வாழ்வில் உள்ளன. வடுக்கள் என்றென்றும் இருக்கும் என்றார். மிஸ்ராவின் வேண்டுகோளின் பேரில், காவல்துறையினர் வழக்கு தொடரவில்லை.
அவர் எப்போதாவது தான் வாய் திறக்கிறார், மேலும் மனசமநிலையற்றவர் போல காணப்படுகிறார் என கிரிஜா சங்கர் மிஸ்ரா குறித்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.