உத்தரப் பிரதேசத்தில் பூலான்தேவி தலைமையிலான கும்பலால் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவணங்கள் மாயமானதால், தீர்ப்பு 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெஹ்மாலில் 1981-ம் ஆண்டில் பூலான்தேவி மற்றும் அவரது ஆட்களால் தாகூர் சமுதாயத்தை சேர்ந்த 20 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தம்மை பாலியல் வன்கொடுமை செய்தோரை பழிவாங்க இக்கொலை சம்பவத்தை பூலான்தேவி செய்ததாக கூறப்பட்டது. பூலான்தேவி உள்ளிட்ட பலர் உயிரிழந்துவிட்ட நிலையில், போஷா, பிகா, விஸ்வநாத், ஷியாம்பாபு ஆகியோருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆவணங்களை கண்டுபிடித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.