பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணிக் கட்சியினருக்கும் இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், மத்திய அமைச்சரவை பெரியளவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தபின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் வங்கியின் தலைவர் கே.வி.காமத்துக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவியும், முன்னாள் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா மனித வளமேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளது.
அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் இம்முறை வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது, பல்வேறு துறைகளில் அனுபவமிக்க நிபுணர்களை சேர்க்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.