ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.
நான்கு நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் வந்துள்ள அவர்,மொராதாபாத் தொழில்நுட்ப கழகத்தில், முக்கிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசினார். நாட்டில் அதி வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது அவசியம். அதிகரித்து கொண்டே வரும் மக்கள் தொகையால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
குறிப்பிட்ட ஒரு மதம் என்றல்லாமல் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் இரு குழந்தை கொள்கையை பின்பற்றினால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இருந்தாலும் இது குறித்த இறுதியான முடிவை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
எனினும் இரு குழந்தைகள் கொள்கை குறித்து வலியுறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடுத்த இலக்கு என குறிப்பிட்டார் மோகன் பகவத். மேலும் அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டவுடன், இந்த விவகாரத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் முற்றிலும் வெளியேறி விடும் என்றார்.