நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை 4 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், கருணை மனுவின் மீது இவ்வளவு வேகத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் சீராய்வு மனுவை, கடந்த செவ்வாயன்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அவன் அனுப்பிய கருணை மனுவை டெல்லி மாநில அரசும், உள்துறை அமைச்சகமும் நிராகரித்த நிலையில், வியாழன் மாலையே மனு குடியரசுத் தலைவர் மாளிகையை அடைந்தது.
குடியரசுத்தலைவர் வெள்ளிக்கிழமை காலையில் கருணை மனுவை நிராகரித்தார். 4 நாட்களுக்குள் கருணை மனு ஒன்றின் மீது முடிவெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1996ம் ஆண்டில் ராஜஸ்தானை சேர்ந்த விவசாயியின் கருணை மனு மீது 42 நாட்களுக்குள் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.