ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி உள்ளிட்டோருக்கு சோனியா காந்தி மன்னிப்பு வழங்கியதைப் போல, நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது தாயார் ஆஷா தேவி நிராகரித்து விட்டார்.
பிரபல டெல்லி வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இந்த கோரிக்கையை டுவிட்டரில் விடுத்துள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, இது போன்ற கோரிக்கையை விடுக்க இந்திரா ஜெய்சிங் யார், எப்படி அவருக்கு இந்த துணிவு வந்தது என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒட்டு மொத்த தேசமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வரும் வேளையில், இந்திரா ஜெய்சிங்கைப் போன்றவர்களால் எங்களைப் போன்றவர்களுக்கு நீதி கிடைக்காமல் போகிறது. மகளின் வழக்கிற்காக உச்சநீதிமன்றம் செல்லும் போதெல்லாம், இந்திராவை பலமுறை கடந்து சென்றுளேன்.
ஒருமுறை கூட அவர் எங்களது கடினமான வாழ்வு குறித்து அக்கறையாக விசாரித்தது இல்லை. ஆனால் இன்றோ கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். இது மாதிரியான ஆட்கள் இருக்கும் வரை நாட்டில் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறைய போவதில்லை என்று கடும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.