இறக்குமதி வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததை, அடுத்து அதை தள்ளுபடி விலையில் விற்று தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்காய விலை 200 ரூபாயை தொட்ட நிலையில், பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாநில அரசுகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், துருக்கி எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து டன் கணக்கில் மத்திய அரசு அதை இறக்குமதி செய்தது. கிலோவுக்கு 55 ரூபாய் என்ற விலையில் அது விற்கப்பட்டது. ஆனால், வடிவத்தில் இந்திய வெங்காயத்தை விட 4 மடங்கு பெரிதான வெளிநாட்டு வெங்காயத்தில் வாசனையே இல்லை என்பதால் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் 22 ஆயிரம் டன் வெளிநாட்டு வெங்காயம் தேங்கி உள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் 15 ஆயிரம் டன் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவற்றை கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து, இருப்பை காலி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.