ஹிஸ்புல் தீவிரவாதிகள் தப்பிச்செல்ல காவல் துணைக் கண்காணிப்பாளரே உடந்தையாக இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களின் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் உடனடியாக ஒப்படைக்கப்படுகிறது.
ஜம்மு விமான நிலைய பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. யாக இருந்த தேவேந்தர் சிங் என்பவர் நவீத் பாபா, அல்தாப் என்ற இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தப்ப உதவி செய்த போது, குல்காம் மாவட்டம் மீர் பஜாரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து ஜம்மு காஷ்மீர் விமான நிலையங்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படலாம் என்ற நிலையில் அவற்றின் கட்டுப்பாடு மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 31 ஆம் தேதி இந்தப் படையினர் பாதுகாப்புப் பணிகளை பொறுப்பேற்றுக் கொள்வர். தற்போது இந்த விமான நிலையங்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறையும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாக்கின்றனர்.