கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, நிழல் உலக தாதா கரீம் லாலா பற்றி கூறிய கருத்தை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திரும்பப் பெற்றுள்ளார்.
புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், மும்பையில் ஒரு காலத்தில் நிழல் உலக தாதாக்கள் கோலோச்சியதாக குறிப்பிட்டார். மும்பை காவல் ஆணையராக யார் வரவேண்டும், தலைமைச் செயலகத்தில் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சோட்டா ஷகீல், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்கள் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது எனவும் அவர் கூறினார்.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மும்பை வரும்போது நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்திப்பது வழக்கம் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார். இந்த கருத்துக்கு ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தமது கருத்தை திரும்பப் பெறுவதாக சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.